கொரோனா தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் தொடங்கியது- 3 நாட்கள் முழுவீச்சில் பணி

14.04.2021 09:25:00

தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவியது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 717 பேர் ஆண்கள், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பேர் பெண்கள், 36 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கூடவே 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் தினமும் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த மாதம் முதல் நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துவிட்டது.