ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி!

19.01.2021 08:35:47

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் அயர்லாந்து அணி சமநிலைப்படுத்தியுள்ளது.

அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கர்டிஸ் கேம்பர் 56 ஓட்டங்களையும் சிமி சிங் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பந்துவீச்சில், சாஹூர் கான் 3 விக்கெட்டுகளையும் அஹமட் ராஸா 2 விக்கெட்டுகளையும் காசிப் டவுட் ஆகியோர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 229 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 116 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், 36 ஓவர்களுக்கு சுருண்டது. இதனால் அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸாவர் பாரீட் 28 ஓட்டங்களையும் காசிப் டவுட் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், சிமி சிங் 5 விக்கெட்டுகளையும் கெவீன் ஒ பிரையன், என்டி மெக்பிரையன் மற்றும் கரேத் டிலானி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஐந்து விக்கெட்டுகளை சாய்த்த சிமி சிங் தெரிவுசெய்யப்பட்டார்.