ஜெனீவா விவகாரம் - நான் கையளித்தது புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு

04.01.2021 08:00:10

ஜெனீவா விவகாரம் தொடர்பில் நான் முன்னர் கையளித்த வரைவு புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அது எனது வரைபு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (03.01) இடம்பெற்ற பின் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்றது. அதனையடுத்து இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருடன் சேர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இங்குள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்கள் எல்லோரும் இணைந்து ஜெனீவா அமர்வு நடைபெறுகிற போது பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து உள்ளன.

அதை வருகிற சிலநாட்களில் அமர்ந்திருந்து ஒரு வரைபை தயாரித்து அதற்கு பின்னர் அனைத்து தரப்புகளிடத்திலுரும் பேசி ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

முன்னர் வெளியான ஜெனீவா தொடர்பான வரைபு நான் வரைந்த வரைபு அல்ல. அது புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அவர்கள் எங்களுக்கு அனுப்பினார்கள். மற்றைய இரண்டு கட்சிகளுக்கும் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர்கள் நான் வரைந்ததாக நினைத்து நிராகரித்து உள்ளார்கள். அதனை பின்னர் விக்கினேஸ்வரன் ஐயா ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்னஞ்சல் ஒன்று பார்த்தேன். அது வேற கதை. நாங்கள் அடுத்த சில நாட்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் இணைந்து இங்கு பேசி இணைக்கப்பாட்டுக்கு வந்த விடயங்களை பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு அனைவரும் வரலாமா என ஆராயவுள்ளோம் என்றார்.

இதன்போது மாகாணசபை முறையை அரசாங்கம் நீக்குவது குறித்து பேசுவது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,

அரசாங்கத்திடம் கையளித்த அரசியலமைப்பு தொடர்பான எமது யோசனையில் மாகாணசபை முறை தொடர்பில் தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளோம். மாகாணசபையை முறையை ஒழிக்க இடம்கொடுக்க முடியாது. அதில் பாரிய பின்விளைவுகள் இருக்கிறது. அரசாங்கம் வேறு வேறு ஜனாதிபதிகளின் கீழ் சர்வதேசம், இந்தியா மற்றும் பல தரப்புகளுக்கு தமது வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். அதை எல்லாம் மீறி செயற்பட முடியாது. அதை மீறி செயற்படுமாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவுகள் எடுப்போம் என்றார்.