திடீர் விசிட் அடித்த மோகன்லால்

09.01.2021 07:43:45

ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டு இருக்கும் நிலையில் நடிகர் மோகன்லால், மம்முட்டியை நேரில் சந்தித்து இருக்கிறார்

மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது உண்டு. மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்முட்டி படங்கள் வரும்போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக தயாரான படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், இடைவேளைக்கு பிறகு முக்கியத்துவம் இல்லாத காட்சியில் மோகன்லாலை நடிக்க வைத்து அவமதித்துவிட்டதாகவும் மோகன்லால் ரசிகர்கள் பொங்கினர். அந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்தும் பரபரப்பு ஏற்படுத்தினர். 

ஆனால் மம்முட்டி, மோகன்லால் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில் மம்முட்டி புதிதாக கட்டி உள்ள வீட்டுக்கு மோகன்லால் திடீரென்று சென்று அவரை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

.