தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் வழிவிடவேண்டும் – தி.சரவணபவன்

21.04.2021 09:24:45

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூருவதற்கு இன்று பொலிஸார்,படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.இதன்போன்று தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் வழிவிடவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இலங்கையினை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றது.இந்த தாக்குதலி உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரம் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுத்தூபியில் இன்று காலை விசேட நிகழ்வு நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற்ற நேரத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத்தூபியில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலியும் செலுத்தப்பட்டது.