இருதயத்தில் அடைப்பு நீக்கம் - 24 மணி நேர கண்காணிப்பில் கங்குலி இருப்பார்

03.01.2021 11:05:20

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இருதயத்தில் அடைப்பு நீக்கப்பட்ட நிலையில் அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் 48 வயதான கங்குலிக்கு நேற்று திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தகுழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. இதில் ஒரு அடைப்பு 90 சதவீத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒரு அடைப்பு நீக்கப்பட்டது. கங்குலியின் உடல்நலம் தொடர்பாக டாக்டர் ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார். அவரது இருதயத்தில் தற்போது 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும்.

அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாளை ஆலோசிக்கப்படும். அவர் அபாய கட்டத்தில் இல்லை. நன்றாக பேசுகிறார். இன்று காலை கங்குலிக்கு வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

உட்லான்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலியை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறும்போது, கங்குலி நலமாக உள்ளார். என்னுடைய உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி என்றார்.

இதேபோல மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப்பும் தனது மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று கங்குலியிடம் நலம் விசாரித்தார்.

அவர் விரைந்து குணமடைய வேண்டுமென்று கிரிக்கெட் வீரர்கள் தற்போது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.