ஏவுகணை தடுப்பு அலகுகள் குறித்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

15.04.2021 09:20:06

 

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், எஸ் 400 மற்றும் பிற ஒப்பந்தங்களை பொறுத்தவரை ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு மற்றும் பிற கடப்பாடுகளை பூர்த்தி செய்ய இந்தியாவும், ரஷ்யாவும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 அலகுகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த அமெரிக்கா இராணுவ அமைச்சர் ஆஸ்டின் இந்த தடை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.