பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு! ஒத்துழைப்பு வழங்குவோம் - சுமந்திரன்

22.02.2021 09:00:00

நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளைக் கையளித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே, சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, 

புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவினருடன்  நாம் கலந்துரையாடியதுடன், எமது யோசனைகளை முன்வைத்தோம். சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது நாம் எமது நிலைப்பாடுகளை அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத நாட்டிற்குள் இந்தத் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவர்களிடம் கூறினோம்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த 30 வருடகாலமாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் அதற்கு பல்வேறு அரசாங்கங்களுடனும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதற்குரிய தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என நாம் கூறினோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டோம்.

கேள்வி : தற்போதைய அரசியலமைப்பில் இருப்பதை விடவும் விசேடமான கூறுகள் உங்களின் பரிந்துரைகளில் இருக்கின்றனவா?

பதில் : எம்மைப் பொறுத்தவரை, அதிகாரங்களைப் பரவலாக்கும் முறை அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். அது குறித்து எமக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் பலமுறை வாக்குறுதியளித்துள்ளது. அதற்கமைவாக செயற்பட்டால் இதற்கான தீர்வினை அடைந்துகொள்ள முடியும் என்பதுடன், நாமனைவரும் ஒரே நாட்டவராக வாழக்கூடிய சுமுகமான சூழ்நிலை உருவாகும்.

கேள்வி : காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே நீங்கள் கூறியிருந்தீர்கள். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளனவா?

பதில் : தற்போதுகூட அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஒரு முறையான அர்த்தமுள்ள செயன்முறை வகுக்கப்பட வேண்டும். அதில் பங்களிப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றார்.