சுப்பர் லீக் ரி-20 தொடர் ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் மீண்டும் நடைபெறும் திகதி அறிவிப்பு !

04.06.2021 11:21:34

ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், மீண்டும் நடைபெறுவது உறுதியாகியிருந்த நிலையில் இத்தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இத்தொடர் எதிர்வரும் ஜூன் 9ஆம் முதல் ஜூன் 24ஆம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒரே நாளில் இரு போட்டிகள் என ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளன. அபுதாபி நேரப்படி முதல் போட்டி மாலை 5 மணிக்குத் ஆரம்பமாகும்.

பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முதல் போட்டியும் அடுத்த போட்டி இரவு 11 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.

அபுதாபியில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் இரு போட்டிகள் உள்ள நாட்களில் முதல் போட்டி மாலை 5 மணிக்குத் ஆரம்பமாகிறது.

இதனால் இதனால் பாகிஸ்தான் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்க வேண்டியுள்ளது.

எனினும் ஒரே போட்டி நடைபெறும் நாட்களில் பாகிஸ்தான் நேரப்படி 9 மணிக்கு அந்த போட்டி ஆரம்பமாகும்.

இரவு 11 மணிக்கு போட்டி ஆரம்பமானால் முழு போட்டியையும் எப்படிப் பார்த்து முடிப்பது என இரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதேவேளை, தொடரை நடத்துவதற்கு கொரோனா தொடர்பான நடைமுறையில் உள்ள சிலவற்றிற்கு விலக்கு அளித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் வரும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரில் பங்கேற்ற ஏழு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால், கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடரை ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்போது 34 போட்டிகளில் 14 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அனைத்து போட்டிகளும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 போட்டிகள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் போட்டிகளும் நான்கு பிளே ஒஃப் போட்டிகளும் லாகூரில் நடைபெற இருந்தன.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதில் ஆறு பேர் வீரர்கள். இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், மீதமுள்ள 20 போட்டிகளையும் நடத்தி முடிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னெடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது.