அபார துடுப்பாட்டம்: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி அணி !

19.04.2021 10:47:14

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மயாங் அகர்வால் 69 ஓட்டங்களையும் ராகுல் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

டெல்லி அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ், மேரிவலா, ரபாடா மற்றும் அவிஷ்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி கெபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் ஷிகர் தவான் 92 ஓட்டங்களையும் பிரித்வீ ஷா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், ஜெய் ரிச்சட்சன் 2 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 1 விக்கெட்;டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 13 பவுண்ரிகள் அடங்களாக  92 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.