பிரபல இயக்குனருடன் 4-வது முறையாக இணையும் ஜிவி பிரகாஷ்

15.02.2021 11:06:03

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்துக்கு இசையமைக்க உள்ளாராம்.

இயக்குனர் ஷங்கருடன் துணை, இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. 

இதனிடையே தான் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார் வசந்தபாலன். அப்படத்தை அவர் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில், அப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வசந்தபாலனின் வெயில், அங்காடித் தெரு, ஜெயில் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி தற்போது நான்காவது முறையாக இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.