நீரை சேமியுங்கள் – மோடி அறிவுரை

28.02.2021 11:04:01

கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் நீரை சேமிப்பது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வானொலி வாயிலாக பிரதமர் மோடி தமது 74வது மாதாந்திர உரையான மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். தமது உரையில் நீர் சேமிப்பில் உள்ள பொறுப்பை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.

மழை நீர் சேகரிப்பை உத்வேகப்படுத்தும் நோக்கில் பிரச்சாரத் திட்டம் ஒன்றை ஜல்சக்தி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என மோடி தெரிவித்தார்.

இன்று அனுசரிக்கப்படும் தேசிய அறிவியல் தினம், சர் சி.வி ராமனின் ராமன் விளைவுகளுக்காக அர்ப்பணிக்கப்படுவதாக கூறினார்.

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் வளர்ச்சி பற்றி இளைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தினார்.

ஆய்வகங்களில் இருந்து பயன்பாட்டுக்கு என்ற வகையில் அறிவியலை நாம் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

சுயசார்பு இந்தியாவுக்கு அறிவியலின் பங்கு மிகவும் அதிகம் என்றார் மோடி. சுயசார்பு இந்தியா திட்டம் என்பது வெறும் அரசின் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு தேசிய உணர்வு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக பிரதமராகவும், முதலமைச்சராகவும் இருந்த தங்களுக்கு எதையாவது இழந்து விட்டோம் என்ற எண்ணம் உள்ளதா என நேயர் ஒருவர் மன் கி பாத் உரையின் போது மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மோடி, உலகின் மிகவும் பழமையான மொழியான தமிழை கற்க போதிய முயற்சிகளை தம்மால் எடுக்க இயவில்லை என்றும், தன்னால் தமிழை கற்க முடியவில்லை எனவும் கூறினார்.

தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவலையடைந்தவர்களாக இருக்க கூடாது, வீரமானவர்களாக இருக்க வேண்டும் என்ற பொருள்பட பேசிய மோடி, தேர்வுக்கான விவாதம் குறித்த தமது நிகழ்ச்சிக்கு யோசனைகளை வழங்குமாறு ஆசிரியர்களையும், பெற்றொரையும் கேட்டுக் கொண்டார்.