மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது – உதய கம்மன்பில

12.01.2021 10:00:00

நாட்டில் கொரோனா தொற்றின் நிலை சுமூகமாகும் வரையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுகாதார நிலையை கருத்திற்கொண்டு தேர்தலை நடத்திருக்க ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மீண்டும் நாடு வழமைக்கு திரும்பும்போது மாகாணசபைத் தேர்தல் குறித்து மீளாய்வு செய்து அரசாங்கம் முடிவை அறிவிக்கும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு பழைய தேர்தல் முறையின் அடிப்படையில் நடத்தப்படும் கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மாகாண சபைகளும், உள்ளூராட்சி அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோன் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தலைவர் உட்பட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட விதிகள் குறித்து ஆராயும் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ற்கனவே தொடங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.