பிரித்தானியா முன்வைத்த கருத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

27.04.2021 10:14:22

பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லையென அந்நாட்டு அரசு தரப்பு கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என நாடு  கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள், தங்களது உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கு முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளை பயங்கரவாத தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறை அயமைச்சரின் செயற்பாடு சட்டத்துக்கு முரணானது என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேன்முறையீட்டு ஆணையகம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேன்முறையீட்டு ஆணையகம் தனது 2ஆம் கட்டத் தீர்ப்பில், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவதற்கு, 90 நாட்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

இவ்வாறு தடையினை நீக்கும் விடயத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சட்டரீதியான போராட்டத்தின் ஊடாக முதல்கள வெற்றினையும் கண்டுள்ளது.

ஆகவே குறித்த வெற்றியினை அரசியல் ரீதியான வெற்றியாக்குவது பிரித்தானிய வாழ் மக்களுடைய பொறுப்பாகும்.

மேலும் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தடையினை நீக்க கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டியது தற்போதைய தேவையாக காணப்படுகின்றது.

அதாவது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம்,  உள்துறை அமைச்சரை நோக்கி கொண்டுச் செல்லப்படும்.

இந்த விடயத்துக்காகவே lifttheban.uk எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டு, செயற்பட்டு வருகின்றது.

எனவே குறித்த இணையத்தளத்துக்குள் நுழைந்து,  தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்த வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்று கடமையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.