செப்டம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.

25.05.2021 10:15:22

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன.

ஆப்கானிஸ்தான் நடத்தும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. எனினும், இடம் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை.

ஐ.சி.சி மற்றும் ஆசிய கிரிக்கெட் சபையின் நிகழ்வுகளில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் அடிக்கடி விளையாடியிருந்தாலும், இருதரப்பு தொடர்களில் விளையாடியதில்லை.

ஆகையால், முதல்முறையாக நடத்தப்படவுள்ள இத்தொடர் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் கூறுகையில்,

‘இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடப்படும். ஆனால் நாங்கள் இன்னும் இடத்தை உறுதிப்படுத்தவில்லை. ஷார்ஜா, அபுதாபி அல்லது டுபாயில் இதை நடத்துவதற்கு நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான விசா பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என கூறினார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் பின்னர் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முத்தரப்பு ரி-20 தொடரொன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளது.