திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

16.01.2021 08:20:00

50 சதவீத இருக்கை அனுமதி உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளது.

சென்னை சூளைமேட்டில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன்கள் மூலமாக கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், காணும் பொங்கல் கொண்டாடுவதற்கு கடற்கரை, பொழுது போக்கு மையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே காணும் பொங்கல் (இன்று) அன்று பொதுமக்கள் பொது இடங்களில் கூட கூடாது. தற்போது புத்தாண்டின் போது ஒத்துழைப்பு வழங்கியது போன்று போல காணும் பொங்கலின் போதும் முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும்.

50 சதவீத இருக்கையை பயன்படுத்தி தான் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை மீறிய தியேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.