மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய நேபாள அரசு திட்டம்

02.03.2021 09:29:43

இந்தியாவிடம் இருந்து 20 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஹ்ருதயேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இரண்டாம் கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதுகுறித்து காத்மாண்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ நேபாள மக்களிடையே கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் முன்னுரிமை பட்டியல் முறையாக பின்பற்றப்படும்.

55 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு வரும் 7-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்ட முன்னுரிமைப் பட்டியலில் நானும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளேன்.

மிக முக்கியமான நபா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தும் வகையில் விதி எதுவும் கிடையாது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்காக இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே 10 இலட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை நேபாளம் வாங்கியிருக்கிறது.

மேலும் 20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.