கருப்பின இளைஞர் போலீஸ் காவலில் பலி: பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது

15.01.2021 12:12:45

பெல்ஜியத்தில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி கைதான 23 வயதான இப்ராஹிமா பாரி  என்ற கருப்பின இளைஞர் போலீஸ் காவலில் மரணமடைந்தார். இந்த சம்பவம்  தொடர்பாக தலைநகர் பிரஸ்ஸல்சில்  கலவரம் வெடித்துள்ளது. கலவரக்காரர்களிடையே சிக்கிய பெல்ஜியம் மன்னரின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

 

 

பெல்ஜியம் மன்னர் பிலிப்பி  அவரது  இல்லமான லாக்கன் அரண்மனைக்கு செல்லும் வழியிலேயே கலவரக்காரர்களிடம் சிக்கி உள்ளார். ஆனால், துரிதமாக செயல்பட்ட மன்னரின் பாதுகாப்புப்படையினர், அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சம்பவத்தின் போது 500-கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக  கூறப்படுகிறது. சிலர் கருப்பினத்தவர் உயிரும் முக்கியமே  என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.இச்சம்பவம் ஒரு கட்டத்தில் கலவரமாக வெடித்துள்ளது என கூறப்படுகிறது.

 

நகரின் தெருக்களில் நான்குக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கான வரம்பை மீறியதற்காக இளைஞர் பாரி சனிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இளைஞர் பாரி கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். போலீஸ்  காவலில் இளைஞர் பாரி மரணமடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை மீறி தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இளைஞர் பாரி மரணமடைந்ததாக கூறப்படும் காவல் நிலையத்தையும் கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.இதுவரை 30 சிறுவர்கள் உட்பட மொத்தம் 116 பேர்களை கலவரம் தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.  பாரி இறந்ததற்கான உண்மையான காரணத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வைத்துள்ளனர்.