ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர்

17.01.2021 10:52:22

 

ஜெர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இங்கிருந்து இயங்குவதால் எப்போதும் இந்த விமானநிலையம் மிகவும் பரபரப்பாகவே இருக்கும்.

இந்நிலையில், அந்த விமான நிலையத்திற்கு மாலை 5.16 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) பெட்டியுடன் ஒரு நபர் வந்தார். அவர் கொரோனா விதிகளான முகக்கவசம் அணியாததால் அவரை தடுத்து நிறுத்திய போலீசார் முகக்கவசம் அணித்துவிட்டு வரும்படி கூறினர்.

அப்போது அந்த நபர் போலீசாரை நோக்கி, ‘நான் உன்னை கொன்றுவிடுவேன், அல்லாஹு அக்பர் (கடவுளே சிறந்தவன்)’ என கூறிக்கொண்டு தனது கையில் வைத்திருந்த பெட்டியை விமான நிலையத்திலேயே வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றான்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி முனையில் அந்த நபரை சுற்றிவளைத்தனர். மேலும், அந்த நபர் கொண்டுவந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என சந்தேகம் எழுந்ததுள்ள வெடிகுண்டு நிபுணர்கள் வரவலைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

இந்த பரபரப்பு சம்பவங்களால் பிராங்க்பிரட் விமானநிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அனைத்து விமான போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானநிலையம் மூடப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
 

இதையடுத்து, துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்ட அந்த நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், அந்த விமான நிலையத்தின் மற்றொரு நுழைவு வாயிலில் மர்மநபர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது என டெய்லி மெயில் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.