இன்னுமொரு இனப்படுகொலையை இலங்கை அரசு செய்துள்ளது - சிவசக்தி ஆனந்தன்

14.05.2021 10:12:42

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் மரணித்தவர்களை நினைவு கூருவது என்பது அடிப்படை உரிமையாகும் என இலங்கை அரசியலமைப்பில் மட்டுமன்றி  ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனாலும் அடிப்படை உரிமையை  தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளே தற்போது அரங்கேறுகின்றது.

இதேவேளை ஜனநாயகத்திற்கான அனைத்து வழிகளையும் முடக்கும் செயற்பட்டை இராணுவ நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் தற்போது யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான வழியை முடக்கியுள்ளதன் ஊடாக  தமிழ் இனத்தின் மீது கடுமையான அடக்கு முறையை அரசாங்கம் பிரயோகிக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும் தமிழர்கள் தங்களுக்கான உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டுதான் உள்ளார்கள் என்பதனை சர்வதேச நாடுகள் இதனூடாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளமையானது இன்னுமொரு இன அழிப்பிற்கான முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.