பாகிஸ்தான் அணியுடான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி !

05.04.2021 08:07:21

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி சமநிலை செய்துள்ளது.

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவுமா 92 ஓட்டங்களையும் டி கொக் 80 ஓட்டங்களையும் வெண்டர் டஸன் 60 ஓட்டங்களையும் மில்லர் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரிடி, மொஹமட் ஹஸ்னைன் மற்றும் பஹீம் அஸ்ரப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 342 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பக்கு 324 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 193 ஓட்டங்களையும் பாபர் அசாம் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், என்ரிச் நோட்ஜே 3 விக்கெட்டுகளையும் என்டில் பெலுக்வாயோ 2 விக்கெட்டுகளையும் ரபாடா, ங்கிடி மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 155 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 18 பவுண்ரிகள் அடங்களாக 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பகர் சமான தெரிவுசெய்யப்பட்டார்.

பகர் சமானின் இந்த 193 ஓட்டங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலில் அவுஸ்ரேலியாவின் ஷேன் வொட்சன் 185 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் டோனி மற்றும் கோஹ்லி 183 ஓட்டங்களுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர்.

பகர் சமான் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் சேஸிங் துடுப்பாட்டத்தில் தோல்வியை தழுவிய அணியில், தனியொரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டத்தை அவர் பதிவுசெய்தார்.

முன்னதாக பங்களாதேஷ் அணிக்கெதிரான சிம்பாப்வே வீரர் சார்லஸ் கோவண்ட்ரி 194 ஓட்டங்களை எடுத்ததோ சாதனையாக உள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் சென்சூரியனில் நடைபெறவுள்ளது.