சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப் : ஸ்வெரவ் காலிறுதிக்கு முன்னேற்றம் !

29.04.2021 11:41:55

ஜேர்மனியில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கே உரித்தான பவேரியன் சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், லித்துவேனியாவின் ரியார்டாஸ் பெரான்கிஸ்சை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஸ்வெரவ்வுக்கு பெரான்கிஸ் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய ஸ்வெரவ், இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், பெலராஸின் இலியா இவாஷ்காவுடன் மோதவுள்ளார்.