திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன கைப்பற்றியது.

16.01.2021 07:58:54

கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) புதிய தவிசாளர்களுக்கான தெரிவு, உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் 22 உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர். இவர்களில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தங்கராசாவும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ரத்நாயக்கவும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டனர்.

இவர்களுக்கிடையிலான வாக்கெடுப்பின்போது தங்கராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களினதும் சுயேச்சைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களதும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரினதும் ஆதரவை பெற்று பத்து வாக்குகளை பெற்று இருந்தார்.

எதிரணியில்  ரத்நாயக்க, இலங்கை பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி,  எஸ்.டி.பி.டி,  இலங்கை சுதந்திரக் கட்சி போன்றவற்றின் ஆதரவை பெற்று 12 வாக்குகளை பெற்றார்.

வாக்கெடுப்பின் இறுதியில் ரத்னாயக்க, 2 பெரும்பான்மை வாக்குகளால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.