யூ ட்யூப் சேனல்கள் வரம்புமீறுகின்றனவா ?

16.01.2021 08:02:05

ஆபாச பேட்டி சர்ச்சையால் யூட்யூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் பார்வையாளர்களை அதிகம் கவரயூ ட்யூப்  சேனல்கள் அத்துமீறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க ஒரு ஸ்மார்ட் போன் போதும்… நானும் ஒரு பெரிய செலிபிரிட்டி தான் என்பதை நிரூபிக்க யூட்யூப் சேனலை நடத்தி வருவோரும் பேட்டி எடுப்போரும் புற்றீசல்போல முளைத்து வருவதே அதற்கு சாட்சி… ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தரம் தாழ்ந்த ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த பேச்சுகளை வெளியிட்டால் பார்வையாளர்களை கவரலாம் என நினைத்து, அதை திட்டமிட்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்… அப்படி ஒரு சம்பவத்தில் சென்னையின் யூட்யூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைதாகினர். ஆபாசமான கேள்விகளை முன்வைத்து அதற்கு பதில் கொடுக்கும் பெண்ணின் பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதே இந்த கைதுக்கு பின்னணி. கைதான 3 பேரிடம் விசாரணை செய்ததில் இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை கொண்ட 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் அதை பார்த்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யூ ட்யூப் சேனல்களை நடத்துவோர் மட்டுமின்றி அதில் பங்கேற்பாளராக இருப்போருக்கும் கடமைகள் இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் பாலு. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தனியாக காவல்துறையில் ஒரு பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார் அவர்….அதேநேரம் யூடியூப் சேனல்களை நடத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்கும் பட்சத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் இருக்கும் என்கிறார் சமூக ஆர்வலர் பூபாலன்

தவறுகள் நடக்கும் போதே அதற்கான கடிவாளத்தையும் இறுக்கினால் நிச்சயம் ஆபத்துகளில் இருந்து தள்ளியே இருக்கலாம் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.