கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா ?

15.05.2021 12:00:03

கொரோனா இரண்டாம் அலையின் வேகம் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே வந்தது.

குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்தது.

தொடர்ந்து உயர்ந்த பாதிப்பால் இம்மாத தொடக்கத்தில் தொடர்ந்து 4 நாட்கள் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதிலும் குறிப்பாக 7-ந் தேதி ஒரேநாளில் 4.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டது இதுவரை ஒருநாள் பாதிப்பில் உச்சமாக உள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 

இதன் பயனாக பல மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு படிப்படியாக குறையத்தொடங்கியது.