கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஜனவரி 16 முதல்….

11.01.2021 10:43:10

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ம் தேதி அன்று தொடங்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை மத்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் (பிஐபி) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடுவதில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் 3 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு கீழே இருந்தாலும் இணை இடர்ப்பாடுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பிரிவில் 27 கோடி மக்கள் வருவார்கள் என்று இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

கோவிஷீல்டு (ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராஜெனீகா), கோவேக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரப் பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 சூழ்நிலையையும், தடுப்பூசி போடுவதற்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எவ்வளவு தூரம் தயார் நிலையில் உள்ளன என்பதையும் ஆராய்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் ஒரு உயர்நிலைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கோவிட் -19 தொடர்புடைய பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர மோதி விரிவாக இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்தார் என்கிறது பத்திரிகை தொடர்பு அலுவலகம்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, வருகிற லோரி, மகர சங்கராந்தி, பொங்கல், மக் பிகு ஆகிய பண்டிகைகள் முடிந்த பிறகு 2021 ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது என்கிறது பத்திரிகை தொடர்பு அலுவலகம்.

அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள பிற தகவல்கள்:

Co-WIN என்ற தடுப்பூசி வழங்கல் மேலாண்மை அமைப்பு என்ற டிஜிடல் மேலாண்மைத் தளம் குறித்தும் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

தடுப்பூசி இருப்பு, அவை எந்த வெப்ப நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும், தடுப்பூசி பயனர் தகவல்களையும் இந்த தளம் உடனுக்குடன் புதுப்பிக்கும்.

தடுப்பூசிக்காக பதிவு செய்துகொண்டவர்களுக்கு தானியங்கி முறையில் நேரம் ஒதுக்குவதன் மூலம் பல நிலைகளிலும் உள்ள திட்ட மேலாளர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும்.

பயனர் தகவல்களையும் இந்த தளம் சரிபார்க்கும் என்பதோடு, வெற்றிகரமாக தடுப்பூசி போட்ட பிறகு டிஜிடல் சான்றிதழ் இந்த தளம் தயாரிக்கும்.

இந்த தளத்தில் ஏற்கெனவே 79 லட்சம் பேர் பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றும் கூறுகிறது பத்திரிகை தொடர்பு அலுவலகம்.

தடுப்பூசி போடுகிறவர்களுக்கு தரவேண்டிய பயிற்சி நடைமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 2,360 பேருக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. இவர்கள் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி தருகிறவர்கள். இவர்களில் மாநில தடுப்பூசி அலுவலர்கள், குளிர்ப்பதன சங்கிலித் தொடர் அலுவலர்கள் உள்ளிட்டோர் அடக்கம்.

“மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில், 61 ஆயிரம் திட்ட மேலாளர்கள், 2 லட்சம் தடுப்பூசி போடுவோர், 3.7 லட்சம் தடுப்பூசி போடும் குழு உறுப்பினர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளார்கள்” என்கிறது பத்திரிகை தொடர்பு அலுவலக செய்திக் குறிப்பு.