ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கை எதிர்த்து ஹைடியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் !

01.03.2021 10:00:00

 

கரீபியன் தீவான ஹைடியில் அந்நாட்டு ஜனாதிபதி, சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதாக கூறி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற மறுத்ததால் கோபமடைந்த எதிர்ப்பாளர்கள், தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக குரலெழுப்பியதுடன், ஆங்காங்கே டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஹைதி மக்கள் குரல் எழுப்பினர்.

புராட்டஸ்டன்ட் போதகர்கள் ஏற்பாடு செய்த அமைதியான அணிவகுப்பில் சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த ஹைட்டியர்கள் அடங்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ஜோவனல் மோஸின் பதவிக்காலம் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியுடன் முடிவடைந்ததாக பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் கூறுகின்ற போதும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் தனது பதவிக் காலம் முடிவடையும் என ஜனாதிபதி ஜோவனல் மோஸ் கூறி வருகிறார்.

இதனால் கடந்த 8ஆம் திகதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் பிற நகரங்களின் வீதிகளில் இறங்கி எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி முக்கிய நீதிபதி மற்றும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட 23பேர் கைது செய்யப்பட்டனர்.