சவுதி இளவரசர் ஜமால் கஷோக்கி கொலை விவகாரத்தில் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்: ஸெங்கிஸ்

02.03.2021 09:45:52

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்வதற்கு உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சவுதி இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என ஜமால் கஷோக்கி திருமணம் செய்துகொள்ள இருந்த ஹாடீஸா ஸெங்கிஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குற்றமற்ற, அப்பாவியான கஷோக்கியின் கொலைக்கு ஆணையிட்ட பட்டத்து இளவரசர் எந்த தாமதமும் இன்றி தண்டிக்கப்படுவது அவசியம்.

அது நாங்கள் கோரும் நீதியாக மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் செயலாகவும் இருக்கும்.

முடிக்குரிய இளவரசர் தண்டிக்கப்படவில்லை என்றால், அது என்றைக்கு நம் அனைவருக்கும் ஆபத்தாக இருக்கும். மனித குலத்தின் மீது படிந்த கரையாக அது இருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி பைடனில் தொடங்கி, உலக தலைவர்கள் அனைவரும் இளவரசர் முகமது பின் சல்மானுடம் கைக்குலுக்க தயாராகவுள்ளனரா என தங்களை தாங்களே கேள்வி கேட்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சவுதி இளவரசர் கஷோக்கியின் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஜமால் கஷோக்கி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.