ஜப்பானில் கொவிட்-19 அதிகரிப்பு: ஒசாகா உள்ளிட்ட மூன்று இடங்களில் அவசர நிலை பிரகடனம்!

02.04.2021 11:13:00

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் கடந்த மாதத்திலிருந்து புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 1ஆம் திகதி) முதல் நடைமுறைக்கு வந்த புதிய வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மே 5ஆம் திகதி வரை நீடிக்கும் என பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை நோய்த்தொற்றுகள் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கம் கொண்டது. இதனால் நாங்கள் மற்றொரு அவசரகால நிலையை வெளியிட வேண்டியதில்லை’ என கூறினார்.

ஒசாகாவில் பிரித்தானியாவின் புதிய வைரஸ் மாறுப்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.