அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் எதிரொலி – கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

16.05.2021 10:40:58

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கன்னியாகுமரியில் தொடர்ந்து நான்கு நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால், ஏழாயிரம் ஏக்கரிலுள்ள நெல், வாழை மரங்கள் நீரில் மூழ்கின.

ஆற்றுவெள்ளம் புகுந்து அஞ்சுகிராமம், பூதப்பாண்டி, சிரமடம், அரும நல்லூர், தடிக்காரன் கோணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஏழாயிரம் ஏக்கர் பரப்பில் வாழை, மரவள்ளி, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கொட்டத் தொடங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வீரணமங்கள், ராஜாகாகமங்களம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தொடர் மழை காரணமாக விநாடிக்கு ஆயிரத்து 532 கன அடி நீர்வரத்து அதிகரித்து 43 புள்ளி ஒரு அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஏராளமான வாழைமரங்கள் சாய்ந்தன.