உலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன; வழியனுப்பு உரையில் டிரம்ப் பேச்சு

20.01.2021 10:34:53

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.

அவர் இன்று பதவி ஏற்கிறார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்று கொள்கிறார்.  கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அந்த பதவியில் இருந்து விடைபெறுகிறார்.  அதற்கு முன் நடந்த வழியனுப்பு விழாவில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

 

அவர் பேசும்பொழுது, அமெரிக்க நாடானது, ஒளி மிகுந்த, நம்பிக்கை வாய்ந்த மற்றும் அமைதியை விரும்பும் குடிமக்களை கொண்டது.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் மிக பெரிய தேசிய முயற்சியை தொடங்கினோம்.

 

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி என்ற எனது பதவி காலம் நிறைவடைகிறது.  நாம் ஒன்றிணைந்து செய்த சாதனைக்காக உண்மையில் பெருமையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன்.  கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் என்னை தேர்ந்தெடுத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

சீனா மீது வரலாறு காணாத வரி விதிப்புகளை மேற்கொண்டோம்.  சீனாவுடன் பெரிய ஒப்பந்தம் செய்து கொண்டோம்.  ஆனால், அதற்கான ஈரம் காய்வதற்குள் முழு உலகமும் சீன வைரசால் பாதிக்கப்பட்டது என கூறினார்.

 

இந்த வாரம், நாட்டில் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளது.  அமெரிக்காவை பாதுகாப்புடனும், வளமுடனும் வைத்திருப்பதில் அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இறைவனை நாம் வேண்டுவோம்.  நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என வேண்டி கொள்கிறோம் என கூறியுள்ளார்.

 

டிரம்ப் தனது உரையில், பைடனின் பெயரை குறிப்பிடவில்லை.  இதேபோன்று ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் பற்றி குறிப்பிட்ட அவர், வன்முறையை சகித்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.  பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என முன்பே கூறியிருந்த டிரம்ப், தனது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுக்காக நன்றி தெரிவித்து கொண்டார்.  துணை ஜனாதிபதி மைக் பென்சுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.