திருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு

13.01.2021 11:35:45

ஈஸ்வரன் படம் வெற்றிபெற வேண்டி நடிகர் சிம்பு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ரிலீசாக உள்ளது. இது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகும் 45வது படமாகும். நாளை ஈஸ்வரன் படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் சிம்பு இன்று காலை 5 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கவுதம் உள்ளிட்ட சிலருடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் காரில் கிரிவலம் சென்ற அவர் இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற வித்தியாசமாக கட்டப்பட்ட இடுக்கில் நுழைந்து வெளியே வந்தார். அவர் ஈஸ்வரன் படம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே திருவண்ணாமலை வந்துள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சிம்பு சாமி தரிசனம் செய்தபோது அங்கு தரிசனம் செய்ய வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சிம்புவை காண ஆர்வம் காட்டினர். அவர் சாமி தரிசனம் செய்ததும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.