உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் கைமாறின

16.01.2021 09:21:04

கிழக்கு மாகாணத்தில் தலைவர்களின் அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள், அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதியத்தலாவை பிரதேசசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக அதன் தலைவர் ஹேரத், பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை, பதியத்தலாவை பிரதேச சபையின் உபதலைவர் கோணபுரவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்காமம் பிரதேச சபை தலைவர் ஜமால்தீன் கபீப் ரஹ்மான் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு, இவருக்குரிய அதிகாரங்கள், பிரதேச சபையின் உப தலைவர் அஹமட் லெப்பை நௌஃபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஏறாவூர் பிரதேச சபையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதன் அதிகாரங்கள் உப தலைவர் மீரா லெப்பை ரெபுபாசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மண்முனை பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவருடைய அதிகாரங்கள் பிரதேச சபையின் உப தலைவர் மாசிலாமணி சுந்தரலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை நகர சபை தலைவர் மனோதர ஆசாரிகே சமிந்த சுகத் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அவருக்குரிய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் நகர சபையின் உப தலைவர் துலிப் லால் குமாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.