ஜெனீபர் பிரெடி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் - அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்

19.02.2021 10:04:17

 

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடி வெற்றிபெற்று முதல் முறையாக இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடியும் செக் குடியரசின் கரோலின் முச்சோவாவும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என ஜெனீபர் பிரெடி போராடி கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், சிறப்பாக விளையாடிய கரோலின் முச்சோவா, 6-3 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா 1 செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.

இதில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். எனினும், இந்த செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜெனீபர் பிரெடி 6-4 என செட்டைக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதன்மூலம் இறுதிப் போட்டிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைத்த ஜெனீபர் பிரெடி, இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள்ளவுள்ளார்.