விபத்துக்குள்ளான இந்தோனிஷிய விமானத்தின் கருப்பு பெட்டியினை கண்டெடுக்கும் பணிகள் தீவிரம்!

11.01.2021 10:54:34

இந்தோனிஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியினை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த இடத்தில் தான் விமானத்தின் முன்பாகம் உடைந்து விழுந்துள்ளது. கருப்பு பெட்டிகளில் இருந்து தொடர்ந்து சமிக்ஞை வந்து கொண்டிருக்கிறது. எனவே அதை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், 62 பேருடன் வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமனத்தின் பாகங்களை கண்டுபிடிக்கும் பணியும், இறந்தவர்கள் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது. இதில் 20 ஹெலிகொப்டர்கள், 100 கப்பல் மற்றும் படகுகள், 2,500 மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

விமானத்தில் உள்ள 2 கருப்பு பெட்டிகளில் விமானியின் உரையாடல்கள் மற்றும் விபத்து நடக்கும் போது எழுந்த சத்தம் அனைத்தும் பதிவாகி இருக்கும். அதை மீட்டுவிட்டால் விபத்துக்கான காரணம் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.