இலங்கை அறிமுக போட்டியிலேயே பெத்தும் நிசங்க சதம்: மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் !

25.03.2021 09:00:58

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய (புதன்கிழமை) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், கிரைஜ் பிரத்வெயிட் 8 ஓட்டங்களுடனும் போனர் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் 375 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில். மேற்கிந்திய தீவுகள் அணி 341 ஓட்டங்கள் பின்னிலையில், உள்ளது.


ஆண்டிகுவா மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 169 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திரிமன்னே 70 ஓட்டங்களையும் டிக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோர்ன்வோல் 61 ஓட்டங்களையும் மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எம்புல்தெனிய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 102 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அறிமுக வீரரான பெத்தும் நிசங்க 103 ஓட்டங்களையும் டிக்வெல்ல 96 ஓட்டங்களையும் ஒசேத பெனார்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் மற்றும் கோர்ன்வோல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் அல்சார்சி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்படி 375 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 9 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் வசமிருக்க, இன்னமும் 341 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று களமிறங்கவுள்ளது