இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஏற்ற - இறக்கம் நிறைந்த சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு!

24.02.2021 10:01:29

இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியலில் சம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் தொடர்ந்தும் 12,030 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஸ்பெயினின் ரபேல் நடால் 9,850 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வியைத் தழுவிய ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் ஓரு இடம் ஏற்றம் கண்டு 9,735 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், 9,125 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் 6,630 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் 6,595 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 5,615 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் 4,609 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், ஆர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் 3,480 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், இத்தாலியின் மெட்டியோ பெரீட்டினி 3,480 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியலில், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் காலிறுதிச்சுற்றுடன் வெளியேறிய உள்நாட்டு வீராங்கனை ஆஷ்லே பார்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடந்த சீசனின் கணக்கீட்டு அடிப்படையில் உலகின் முதல்நிலை வீராங்கனையாகவே தொடர்கிறார். அவர் 9,186 புள்ளிகளுடன் உள்ளார்.

இதையடுத்து சம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா, ஒரு இடம் ஏற்றம் கண்டு 7,835 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 7,255 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவின் சோஃபியா கெனின் 5,760 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், உக்ரேனின் எலினா ஸ்விடோலினா 5,370 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5,205 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி வரை முன்னேறியதற்காக 4 இடங்கள் ஏற்றம் கண்டு 4,915 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பெலரஸின் ஆர்னொ சபலெங்கா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 4,810 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், கனடாவின் பியன்கா ஆண்ரெஸ்கு ஒன்பதாவது இடத்திலும், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 4,571 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.