இராயப்பு ஆண்டகையின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

03.04.2021 10:28:41

 

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (2) யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயரின் பூதவுடல் பேரணியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.

ஓய்வு நிலை ஆயரின் பூதவுடலுக்கு நேற்று வெள்ளிக்கிழைமை மாலை 2.45 மணி முதல் மக்கள் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (3) ஆயிரக்கணக்கான மக்கள் இன, மத பேதமின்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஆயிரின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.