இன்று ஐ.நா. பேரவையில் வௌிவிவகார அமைச்சரின் உரை !

23.02.2021 07:06:00

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு உரையாற்றவுள்ளார்.

தினேஷ் குணவர்த்தன உரையாற்றும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும் அது தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாளை விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டினிக்ரோ, மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.