சென்னை அணியிலிருந்து ஹசில்வுட் விலகல்: மேலுமொரு வீரர் முதல் போட்டியிலிருந்து விலகல் !

02.04.2021 10:54:08

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான தயார் படுத்தல்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், உபாதை, தனிப்பட்ட காரணங்கள் மற்றும் வேறு தொடர்கள் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் நடப்பு தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இந்தப் பட்டியலில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரரான அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் விலகியுள்ளார்.

கடந்த வருட ஐ.பி.எல். தொடரில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த அவர், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முக்கியப் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளதால், இந்த முடிவினை எடுத்ததாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த ஜூலை மாதம் முதல் வெவ்வேறு காலக்கட்டத்தில் ககொரானா பாதுகாப்பு வளையத்தில் இருந்துள்ளேன். எனவே தற்போது ஓய்வு எடுக்க முடிவெடுத்து அவுஸ்ரேலியாவிலும் வீட்டிலும் இருக்கவுள்ளேன். அடுத்து முக்கியமான போட்டிகள் உள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பெரிய தொடர் உள்ளது. பிறகு பங்களாதேஷிக்கு எதிரான தொடரும் ரி20 உலகக் கிண்ண தொடரும் உள்ளன. அடுத்ததாக ஆஷஸ் தொடர் உள்ளது.

எனவே 12 மாதங்களுக்கு நிறைய போட்டித் தொடர்களில் விளையாட வேண்டிய நிலைமையில் உள்ளேன். அவுஸ்ரேலிய அணிக்காக விளையாடும்போது நல்ல மனநிலையிலும் உடற்தகுதியிலும் இருக்கவேண்டும் என எண்ணுவேன். எனவே இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என கூறினார்.

இதேபோல ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ங்கிடி முதல் லீக் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய பிறகே அவர் இந்தியா திரும்பவுள்ளார்.

ஆனால், எதிர்வரும் 10ஆம் திகதி மும்பையில் நடைபெறும் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அவர் விளையாடமாட்டார்.

ஏப்ரல் 5ஆம் திகதிக்குப் பிறகு அணியுடன் இணையும் ங்கிடி, தனிமைப்படுத்தப்பட்டு 16ஆம் திகதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார் என அணியின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.