போர்க்கால அடிப்படையில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

14.05.2021 10:23:45

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனாவை தடுக்க தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனக் கூறியிருந்தேன். அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெறவே இந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தில் இருந்து ஒக்சிஜன் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்பட்டு பலன் கிடைத்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே வருகின்றனர். கொரோனா பாதித்தோர் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெறும் செலவை தமிழக அரசே ஏற்கும்.

கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

சென்னை மட்டுமல்ல பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.