தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன? சம்பந்தன் வெளியிட்டுள்ள தகவல்

21.06.2021 16:16:52

"எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக நாளை இடம்பெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

"எரிபொருள்களின் விலைகளை திடீரென அதிகரித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசின் தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அரசின் இந்த முடிவு நாட்டு மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் செயலாகும். இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வருகின்றது.

இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமானால் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்குமா? இல்லையா? என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவே கூடித் தீர்மானிக்கும்.

இந்தப் பிரேரணையை ஆதரிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை எம்மிடம் கேட்டுக்கொண்டது. அவர்களுக்கும் நாம் மேற்படி பதிலையே கூறினோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்" - என்றார்.