இலங்கை தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது !

02.05.2021 11:41:39

இலங்கை தனது கொடூரமான சட்டங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கடும் சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்கிறது. அண்மையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இலங்கை மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளது.


ஆனால் தன் மீது சர்வதேச கண்டனம் மற்றும் விமர்சனங்கள் குறித்து சிறிதும் இலங்கை கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஜனநாயக வழிமுறைகள், மனித உரிமை மாண்புகள் போன்றவை தமது அகராதியில் இல்லை என்று அரசு நினைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.


இப்போது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான (Organisation of Islamic Cooperation -OIC- ஓஐசி தீவிரவாத எண்ணங்களிலிருந்து மக்களை மீட்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறி சிறுபான்மை சமூகங்களை- குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும் வகையிலான சட்டங்களை முன்னெடுத்துள்ளது என்று கூறி அதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.


முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதன் மூலம் அவர்கள் தன்னிச்சையான முறையில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று ஓஐசி கூறியுள்ளது. ஓஐசியின் சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணையம்- IPHRC- முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையை இலங்கை அரசு தடை செய்துள்ளது குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச மனித உரிமைகள்
கடப்பாடுகளை மீறும் வகையில் உள்ளது என்றும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்று கூறியுள்ளது.


இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அண்மையில் கொண்டுவரப்பட்ட `வன்முறையுடன் கூடிய அதிதீவிர மதவாதக் கொள்ளையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக` ஏற்படுத்தப்பட்டுள்ள `சமூக இணைப்பு மையங்கள்` போன்றவை முஸ்லிம்களை தன்னிச்சையாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்து அவர்களின் மனித உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமின்றி, அப்படி சட்டவிரோதமாகச் செயல்படுவோரைக் காப்பாற்ற அந்தச் சட்டம் வழி செய்கிறது என்று அந்த அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இலங்கை உடனடியாக தனது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, தாங்கள் அண்மையில் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் முன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை ஆகியவற்றை தாங்கள்
தீவிரமாகக் கவனத்தில் எடுத்துள்ளதாகக் கூறுகிறது. ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும மரணங்கள், சித்திரவதை, சட்டவிரோத கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள்
சுதந்திரமாகச் சுற்றித் திரிவது கவலையளிக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.


அரசுகளுக்கிடையே உலகளவில் இரண்டாவது பெரிய கூட்டமைப்பாக இந்த ஓஐசி திகழ்கிறது. 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த அமைப்பு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பலம் கொண்ட ஒரு அமைப்புமாகும். பன்னாட்டளவில்
எடுக்கப்படும் தீர்மானங்களில் ஒரு குழுவாக தீர்க்கமான ஒரு முடிவை ஏற்படுத்தும் வகையில் கூட்டாக வாக்களிக்கும் வல்லமையுள்ளது ஓஐசி. ஆனால் இலங்கை அரசு அதன் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக ஒரு
முடிவை எடுக்கும் சூழல் ஏற்பட்டால், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து சர்வதேச மட்டத்தில் அரசியல் ரீதியான பின்னடைவைச் சந்திக்கக் கூடும்.


இப்படியான பின்புலத்தில் ஓஐசியின் கண்டனம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஏற்கனவே எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை
கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் மோசமாகியுள்ளன என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காரணமாக அங்குள்ள முஸ்லிம்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகிறார்கள் என்றும் அவர்கள் மீது இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் முறையாக
விசாரிக்கப்பட்டு, அனைவருக்கும் நீதி கிடைக்கும் வழிமுறைகளை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுத்து, நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மையினருக்கும் நியாயமான, சுதந்திரமான வகையில் வழக்கை எதிர்கொண்டு நீதியைப் பெற்றுக் கொள்ள வழி
இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


பன்னாட்டு அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி அனைத்து மக்களும் தமது சொந்த கலாச்சாரம் மற்றும் மத அடையாளங்களைப் பேணும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ள ஓஐசி அது மீறப்படுவது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.


ஒருவரின் உடை/ கலாச்சார நடைமுறைகள் காரணமாக புறக்கணிக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட முத்திரை குத்தப்பட்டு அதன் அடிப்படையில் நடத்தப்படுவது ஆகியவை மக்களை மேலும் பிளவுபடுத்தி தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு இட்டுச் சென்று பாரிய சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்கிறது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. பெரும்பான்மையின் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில், இஸ்லாமியர்கள் மீது
ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைக் கண்டு அஞ்சி, வெறுப்புணர்வு கொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது என்று கூறும் ஓஐசி, அது எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்
என்று தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேணப்படுவது தொடர்பில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஓஐசி, இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் தமது பிரச்சனைகளுக்கு உள்ளூர் வழிமுறைகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமே தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதாவது உள்நாட்டுப் பிரச்சனைகளுக்கு உள்நாட்டு வழிமுறைகள் மூலமே தீர்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள ஓஐசி, அனைத்து உள்நாட்டுப் பிரச்சனைகளையும் சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது உசிதமானது அல்ல என்கிற மென்மையான செய்தியையும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு
தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தின் நலன்கள் பேணப்படுவதற்கு சர்வதேச சமூகம் அந்நாட்டுடன் ஈடுபட வேண்டும் எனவும் ஓஐசி வலியுறுத்தி உள்ளது. அதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வழி ஏற்படும் என்கிறது ஓஐசி. இலங்கையில் போர்க் காலத்திலும், போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் ஏராளமான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இன்னும் வழக்கு விசாரணைக்காக நீதி மன்றங்களுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளனர். இதே போன்று அண்மைக் காலத்தில் முஸ்லிம்களும் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உதாரணமாக மன்னாரமுது எனும் புனைப் பெயரில் கவிதைகளை எழுதும் அஹ்னாஃப் ஜசீம் கடந்த ஓராண்டாக இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எழுதிய நவரசம் எனும் கவிதைத் தொகுப்பில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கவிதைகள் இருந்தன என்று அரசு கூறுவது பச்சைப் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவரது கவிதைகள் பயங்கரவாதத்திற்கு எதிரானவை என்று அதை வாசித்தவர்கள் கூறுகின்றனர். தமிழ் மொழியை எழுதப் படிக்கத் தெரியாத பொலிசார் எப்படி அவர் கவிதைகள் பயங்கரவாதத்தை ஊக்குவித்தன என்று கூறுகின்றனர் என்று அவரது சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இலங்கையில் கொடூரங்களுக்கு பெயர்போன மகசின், வெளிக்கட, போகம்பர, அனுராதபுர போன்ற சிறைகளில் இன்னும் நூற்றுக் கணக்கான தமிழ் கைதிகள் வழக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐ நா, இந்தியா உட்பட பல நாடுகள்
இந்த விடயத்தில் தலையிட்டும் இலங்கையின் ஆட்சியாளர்கள் அதை செவிமடுக்க மறுக்கின்றனர்.


பன்னாட்டு அரங்கில் சீனாவை மட்டுமே நம்பி நினைத்ததை சாதித்துவிடலாம் எனும் தவறான எண்ணத்தில் இலங்கை பயணிக்கிறது. இது மிகவும் ஆபத்தான பயணமாகும்
என்பதை இலங்கை புரிந்து நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். சர்வதேச அரசியல் என்பது சினிமா போன்றதல்ல. சினிமாவில் மட்டுமே ஹீரோவாக அறியப்படும் நபர் நூற்றுக்கணக்கன நபர்கள் வந்தாலும் அவர்களை அடித்து துவம்சம்
செய்து துளியளவுகூட கீறல் இல்லாமல் தப்பிப்பார். ஆனால் பன்னாட்டு அரசியலில் ஒரு நாடு நூறு நாடுகளை அடித்து நொறுக்கிவிட்டு தங்களைக் காப்பாற்றும் என்று

இலங்கை நம்பினால் அவர்கள் முட்டாள்களின் உலகத்தில் உள்ளனர் என்பதைத் தவிர வேறு எதையும் சிந்தித்து பார்க்க முடியாது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பலம் பொருந்திய ஒரு அமைப்பு என்பது இலங்கைக்கு தெரியாத விஷயம் அல்ல. கடந்த முறை இலங்கைக்கு எதிராக ஐ நா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போது, இப்போது அரசால் பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் உட்பட பல முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், ராஜபக்ச அரசால் இதே ஓஐசி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு தமக்கு ஆதரவளிக்கும்படி கோர அனுப்பப்பட்டார்கள். இப்போது அதே ஓஐசி நாடுகள் இலங்கை மீது கடும் அதிருப்தியும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. இதை ராஜபக்ச அரசு புரிந்து கொண்டு செயல்படுவது அவர்களுக்கும் நாட்டுக்கும்
நலம் பயக்கும். ஆனால் புரிந்து கொள்வார்களா என்பதே கேள்வி!