எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு உடன்பாடு !

04.06.2021 11:05:55

 

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால், இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.

எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் இதனை அறிவித்தார்.

இதன் படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெஃப்தலி பென்னெட் முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27ஆம் திகதி வரை பென்னெட் பிரதமராக இருப்பார் என்றும் அதன் பிறகு தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் லேபிட் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு பதவியேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.

120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், இஸ்ரேல் அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்படும். கடந்த இரு ஆண்டுகளில் 5ஆவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

இஸ்ரேலிய அரசியலின் அனைத்து வகையானக் கொள்கைகளையும் கொண்டதாக புதிய கூட்டணி அமைந்திருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் 8 கட்சிகளுக்கும் பொதுவான கருத்துகள் மிகமிக அரிது. ஆயினும் 12 ஆண்டுகாலம் ஆளும் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரே திட்டத்துடன் இவை இணைந்திருக்கின்றன.