இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன ?

18.04.2021 11:00:25

 

மணிவண்ணன் கைது செய்யப்பட்டதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதைவிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். நாட்டுக்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் வெள்ளைக்கார அரசியல் பிரமுகர்களும் அது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு தமிழ்ப்பகுதிகளில் நிகழும் ஒரு சம்பவத்துக்கு வெளித்தரப்புகள் எதிர்வினை காட்டுவது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டபோது இவ்வாறான ஓர் எதிர்வினை ஏற்பட்டது.

கடந்த கிழமை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஹிட்லர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு கொழும்பில் உள்ள ஜேர்மானியத் தூதரகம் எதிர்க்கருத்தைத் தெரிவித்தது. திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நெருக்கமான விசுவாசமான ஒருவர்.

இவ்வாறு நாட்டுக்குள் நடக்கும் விவகாரங்களுக்கு வெளிச்சக்திகள் கருத்துக்கூறும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? குறிப்பாக தமிழ் அரசியலில் நிகழும் முக்கியமான விவகாரங்களுக்கு இவ்வாறு வெளித்தரப்புகள் குரல் எழுப்புவது என்பது எதைக் காட்டுகிறது?

அதாவது தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்வைத்து வெளித்தரப்புகள் இலங்கை விவகாரங்களில் கருத்துக் கூறுகின்றன என்பதுதான். அதாவது, தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு வெளித்தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுகின்றன என்பதுதான்.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட 46/1 ஜெனிவா தீர்மானமும் அத்தகையதுதான். இவ்வாறு, தமிழ் மக்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு  எதிராக கருத்துத் தெரிவிக்கும் ஒரு போக்கு எனப்படுவது ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியது. இன்னொரு விதத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக அரசாங்கத்திற்கும் வெறுப்பூட்டக் கூடியது.

இலங்கை அரசாங்கத்தின்மீது வெளித்தரப்புக்கள் இவ்வாறு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. ஜெனிவா தீர்மானம் தொடர்பாக ஒரு தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் அதைத்தான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

ஜெனிவா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தீவில் மற்றொரு ஆட்சி மாற்றத்துக்கான நிலைமைகளை நொதிக்கச் செய்ய முயற்சிக்கின்றன என்ற ஊகம் பரவலாக மேலெழுந்துவரும் ஒரு பின்னணியில் மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்க்க வேண்டும்.

இது அரசாங்கம் வெளித்தரப்புகளின் அழுத்தத்திற்குள் இருக்கிறது என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். அதாவது, அரசாங்கம் வெளி அரங்கில் அதிகம் பலமாக இல்லை என்பதை இது காட்டும். உள்ளரங்கிலுங்கூட அதாவது நாட்டுக்கு உள்ளேயும் அரசாங்கம் ஸ்திரமாக இல்லை என்ற ஒரு கருத்து நாட்டில் ஒரு பகுதியினர் மத்தியில் உண்டு. எதிர்வரும் 19ஆம் திகதி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கைக்குப் போகலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகிறது.

இந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்பிய அபயராம விகாரையின் அதிபதி கலாநிதி ஆனந்த முருத்தெட்டுவ தேரர், விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்றோர் அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதைப்போலவே, இந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கை வகிக்கும் வியத்மக அமைப்புகுள்ளும் சில முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக எனது நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

சிங்கள ஊடகங்கள் மற்றும் சிங்கள நண்பர்களோடு தொழில்சார் ரீதியாக அதிகம் பழகிவரும் அரசு ஊழியரான மேற்படி நண்பர், அரசாங்கத்தின் மூளை என்று வர்ணிக்கப்படும் வியத்மக அமைப்புக்குள் தற்பொழுது கருத்து வேறுபாடுகள்  காணப்படுவதாகத் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பு என்பது 2009இற்குப் பின்னரான சிங்கள-பௌத்த பெருந் தேசியவாதத்தை துறைசார் நிபுணத்துவத்துக்கூடாகப் புதுப்பிக்கும் நோக்கிலானது. அந்த அடிப்படையில்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தந்திரோபாயங்களை அந்த அமைப்பு வகுத்துக் கொடுத்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஒரு சிந்தனை குழாத்தின் உறுப்பினர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது பொருத்தமானது அல்ல என்று வியத்மக அமைப்புக்குள்ளேயே ஒரு பகுதியினர் கருதுவதாகத் தெரிகிறது.

தேர்தல் அபிலாசைகள் அற்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் ஆசைகளற்ற ஆகக்கூடியபட்சம் சுயாதீனமான சிந்தனைக் குழாம்தான் அரசாங்கத்துக்கு நாட்டை முன்னோக்கி செலுத்தும் ஆலோசனைகளை வழங்க முடியும் என்று வியத்மகவிற்குள் இருக்கும் ஒரு பகுதியினர் நம்புவதாகத் தெரிகிறது. சிந்தனைக் குழாத்தின் உறுப்பினர்கள் தேர்தல்மைய  அரசியல்வாதிகளாக மாறுவதோ அமைச்சரவையில் பொறுப்புகளை வகிப்பதோ பொருத்தமானதும் சரியானதும் அல்ல என்று மேற்படி தரப்பினர் நம்புகிறார்களாம்.

ஒரு சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த அறிஞர்கள் அல்லது துறைசார் நிபுணர்கள் ஓர் அரசாங்கத்தில் நேரடியாக அங்கம் வகிப்பது அந்த சிந்தனைக் குழாத்தின் சுயாதீனத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் வியத்மக அமைப்பின் ஒரு பகுதியினர் வியத்மக அமைப்பின் நீண்டகால இலக்குகளை அடைவதற்குப் பொருத்தமான விதங்களில் செயற்படவில்லை என்றும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. அரசாங்கத்துக்குள் இயங்கும் ஓர் அரசாங்கம் என்று நம்பப்பட்ட வியத்மக அமைப்புக்குள் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதும் அரசாங்கம் பலவீனம் அடைவதைக் காட்டுவதாக ஒரு பகுதி தென்னிலங்கை அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் பொருட்களின் விலை அதிகரித்து வருவதாகவும் சாதாரண சிங்களச் சனங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கொட்டைப் பாக்கின் விலை 15 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் சதொச ஊடாக ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகளை வழங்கி வருகிறது. ஆனால், அந்தப் பொதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்று முறைப்பாடுகள் வருகின்றன.

புத்தாண்டு தினத்தையொட்டி வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய ஐயாயிரம் ரூபாயின் விடயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. பெருந்தொற்று நோய் சூழலை அரசாங்கம் அது நினைத்தபடி கையாள முடியவில்லை. அதன் பொருளாதார விளைவுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அதனால், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. ஒரு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதில் அரசாங்கம் எல்லா மாகாணங்களிலும் வெல்லும் என்று கூறமுடியாத ஒரு நிலைமை உண்டு என்று கூறப்படுகிறது.

இதனாலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கக்கூடும் என்ற ஊகங்களும் உண்டு. அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சிலரும் அரசாங்கத்தைக் கட்டியெழுப்பும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாகாண சபைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருவது இந்த அடிப்படையில்தான் என்று ஊகிக்கப்படுகிறது. அரசாங்கமே இவ்வாறு அமைச்சர்களையும் பங்காளிக் கட்சிகளையும் தூண்டிவிட்டு மாகாண சபைகளுக்கு எதிராகப் பேசவிடுகிறதா என்ற ஒரு சந்தேகமும் உண்டு. அதன்மூலம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்பு உண்டு என்பதை ஒரு காரணமாகக் காட்டி மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று நம்பப்படுகிறது

எனினும், இது விடயத்தில் மற்றொரு வியாக்கியானமும் உண்டு. ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்து அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிட முடியும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக புதிய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்படவிருக்கும் சான்றுகளையும் சாட்சியங்களையும் சேகரிப்பதற்கான பொறிமுறை எனப்படுவது வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்தே இயங்கத் தொடங்கும். செப்டம்பர் மாதமளவில்தான் ஐ.நா.வின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும். எனவே, அப்பொறிமுறை அதிலிருந்துதான் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பொறிமுறை இயங்கத் தொடங்கும்பொழுது அது, நாட்டில் மேற்கு நாடுகளுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டிவிடும். மறுவளமாகச் சொன்னால் சிங்கள-பௌத்த பெருந் தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடும். அரசாங்கம்  அப்பொறிமுறையை நாட்டுக்குள் இயங்க அனுமதிக்காது. எனவே, நவீன தொழில்நுட்பங்களின்மூலம் இரகசிய வழிகளினூடாகவும் அப்பொறிமுறையின் கீழ் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும்.

இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களுமே ஐ.நா.வுக்கு அதிகம் உதவ முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. அதில் உண்மையும் உண்டு. இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட இதுபோன்ற அறிக்கைகள் விடயத்திலும் அதுதான் நடந்தது. இந்தக் காரணத்தினாலேயே அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களில் ஒரு தொகுதியையும் தனிநபர்களையும் தடை செய்திருக்கிறது.

ஐ.நா.வின் மேற்படி பொறிமுறையானது  வரும் செப்டம்பரில் இருந்துதான் இயங்கப்போகிறது. அரசாங்கம் அது இயங்குவதைத் தடுக்க முடியாது. வேண்டுமானால் அது நாட்டுக்குள் இறங்குவதைத் தடுக்கலாம். எனவே, தனக்கு எதிரான சான்றுகளையும் தகவல்களையும் திரட்டும் ஓர் அனைத்துலக பொறிமுறைக்கு எதிராக நாட்டில் சிங்கள-பௌத்த இனவாத  உணர்வுகளைக் கிளப்புவது இலகுவானது. அதை அரசாங்கம் செய்ய முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பெருந்தொற்று நோயின் பொருளாதார விளைவுகளால் சரிந்த  வாக்குவங்கியைச் சரிசெய்ய அது உதவக்கூடும்.

எனவே, பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர்விளைவுகளால் அரசாங்கம் ஆடிப்போகும் என்றோ அல்லது தாமரை மொட்டுக் கட்சி உடைந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஏனெனில், தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிவாதத்தை ஒரு குடும்பத்துக்கும் ஒரு கட்சிக்கும் உரியதாக நிறுவனமயப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.  யுத்த வெற்றிவாதம் என்பது 2009இற்குப் பின்னரான சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தின் பிந்திய வளர்ச்சிதான்.

எனவே, பெருந்தொற்று நோயின் தாக்கத்தால் யுத்த வெற்றிவாதம் பலவீனமடைந்துவிடும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. கூட்டணிக் கட்சிகள் மத்தியில் தோன்றும் அதிருப்தி மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற எல்லாவற்றையும் அரசாங்கம்  சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளைத் தூண்டக் கடந்துபோய்விடும் என்பதே உண்மை நிலையாகும். அதுதான் இலங்கை தீவின் அரசியல் பாரம்பரியமும்.

அதுமட்டுமல்லாது, அரசாங்கத்துக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற சீனா இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சீன அபிவிருத்தி வங்கி ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் கடனாகப் பெற்றது. இதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கோஹன்ன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கிருக்கிறார்.

பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர்விளைவுகளின்  மத்தியில் அந்நியச் செலவாணியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு குறித்த கடன்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கத்தோடு சீன அரசு கடன் வழங்குவதாக பாலித கோஹன்ன கூறியுள்ளார். இதன்மூலம், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தலாம்.

அதோடு, அமெரிக்க டொலரோடு ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றும் இலங்கை அரசாங்கம் நம்புகிறது. இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த ஆண்டு சீனா வழங்கச் சம்மதித்த கடன்தொகையின் இரண்டாவது பகுதியாகும். எனவே, இலங்கை தீவை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க சீனா இருக்கிறது என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு உண்டு.

அதேசமயம், இம்மாத இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். அங்கே அவர் இந்திய பிரதமரைச் சந்திப்பார். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

எதுவாயினும், அரசாங்கத்தின் ராஜிய நகர்வு மிகவும் சாதுரியமானது. சீனாவிடமிருந்து கடன் பெறும் அதேசமயம் இந்தியாவுடனும் நெருக்கத்தைப் பேணும் ஒரு தந்திரம். எனவே, பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர் விளைவுகளால் அரசாங்கம் நிலைகுலையும் என்றோ அல்லது தாமரை மொட்டுக் கட்சி உடனடியாகச் சிதையும்  என்றோ நம்புவது காலத்துக்கு முந்திய, எதிர்பார்ப்புக்களின் அடிப்படியிலான  ஓர் ஊகம் ஆகும். ஆட்சி மாற்றத்தைக் குறித்த ஊகங்களும் அப்படித்தானா?