12ஆவது முறையாக நடால் சம்பியன் ! பார்சிலோனா பகிரங்க டென்னிஸ்

26.04.2021 11:06:38

பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், நடாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸிட்சிபாஸ் விளையாடினார்.

இதனால் இரண்டாவது செட் டை பிரேக் வரை நீண்டது. இதை கடும் போராட்டத்திற்கு மத்தியில் 7-6 என்ற செட் கணக்கில் ஸிட்சிபாஸ் கைப்பற்றினார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக விளையாடிய நடால், 7-5 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரில், நடாலின் 12ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக 2005, 2006, 2007, 2008, 2009, 2011, 2012, 2013, 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.