கறுப்பு பட்டியலுக்குள் மீண்டும் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

26.04.2021 11:21:52

 

தற்போதைய வடிவத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலில் இணையும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011ஆம் ஆண்டு சர்வதேச பண சுத்திகரிப்பு சமந்தமான விடயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்ட நிலையில் நல்லாட்சி அரசாங்கமே அந்த நிலைமையில் இருந்து மீட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், வங்கி மற்றும் காப்பீடு போன்ற வெளிநாட்டு நிதி சேவைகளை அனுமதிக்கும் புதிய சட்டங்களைப் பற்றி அரசாங்கம் எதுவும் குறிப்பிடவில்லை என கூறியுள்ளார்.

அத்தகைய சட்டங்கள் இல்லாதது மற்றும் துறைமுக நகரத்தை நிதி அமைச்சின் வரம்பிலிருந்து நீக்குவது மற்றும் நாடாளுமன்றத்திலிருந்து சுயாதீனமாக்குவது என்ற முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்றும் இந்த விடயத்தில் அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.