இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் முஸ்லிம் நாடுகள் ஆதரவளிப்பது குறித்து சிறுபான்மை சமூகத்தினர் எச்சரிக்கை-அல்ஜசீரா

23.03.2021 09:44:06

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய முக்கிய வாக்கெடுப்பிற்கு முன்னதாக இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து இலங்கையின் சிறுபான்மை சமூகத்தினர் முஸ்லிம் நாடுகளை எச்சரித்துள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக இலங்கையில் சிறுபான்மையினத்தவர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சங்களை முஸ்லீம் நாடுகள் கருத்தில் கொள்ளவேண்டும்என சிறுபான்மை சமூக தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ள தீர்மானத்தில் மனித உரிமைகள் பேரவை வாக்களிப்பதற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்தின் பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தமை அதன் கபடத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது என யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் மகேந்திரன் திருவரங்கன் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முஸ்லிம் நாடுகள் இந்தப் பொறியில் சிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள அவர் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்சமும்,நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களால் சிறுபான்மை சமூகத்தினர் துருவமயப்படுத்தப்படுவதும் புதிய அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.