காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம்

21.02.2021 10:15:11

காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உட்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி  ஆரம்பித்து வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்- விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

குறித்த விழாவிற்கு வருகை தந்தவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வரவேற்றார். விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதன்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உட்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அத்துடன்  ஒரு லட்சம் விவசாயிகள் திரண்டு நின்று, காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் வருகையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.