இராணுவத் தளபதி நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து வெளியிட்ட கருத்து!

30.04.2021 09:30:02

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டு பகுதிகள் அபாயமுடையவை என்று சுகாதார தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டால் அவ்வாறான பிரதேசங்களை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தனிமைப்படுத்தப்படும்.

ஆனால் முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva)  தெரிவித்தார்.  

நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் , எனவே மக்கள் சகல பொருட்களையும் கொள்வனவு செய்து அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறான செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , புதனன்று அதிகூடிய எண்ணிக்கையாக 1400 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அடுத்து வரும் வாரங்களில் இதனை விடவும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும்.

இன்று நாடு அவதான நிலையிலேயே உள்ளது. மிக முக்கியத்துவமுடைய கட்டத்தில் நாடு காணப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் எவ்வகையிலேனும் நாம் இதனை வெற்றி கொள்வோம். புத்தாண்டின் முன்னர் மக்களை பாதுகாப்புடன் செயற்படுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினோம். அதனையே இப்போதும் கூறுகின்றோம்.

ஏதேனுமொரு பிரதேசத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்று இனங்காணப்பட்டால் உடனடியாக அந்த பிரதேசத்தையும் , அதற்கு அருகிலுள்ள பிரதேசங்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார தரப்பினரால் அறிவித்தல் கிடைக்கப் பெற்றவுடனேயே துரிதமாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் போது முன் அறிவித்தல்கள் எவற்றையும் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே ஏதேனுமொரு பிரதேசத்தை தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் துரிதமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைப் போன்று முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.